search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்கள் வழக்கு"

    அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்யப்பட்டதை எதிர்த்து, 16 மாநிலங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #DonaldTrump #Emergency
    கலிபோர்னியா:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு பாராளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது.



    ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். இதற்கான நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்ட அவர், இது தொடர்பாக செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

    நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்ட நடவடிக்கை மூலம் அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டனர். அதன்படி, கலிபோர்னியா தலைமையில் 16 மாநிலங்கள் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளன. கலிபோர்னியா வடக்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நாட்டின் அவசரநிலையை அறிவித்திருப்பது அரசியலமைப்புக்கு விரோதமான செயல் என்றும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதால், டிரம்பின் அவசர நிலை பிரகடனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர்.

    ஜனாதிபதியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும், மக்களின் வரிப்பணத்தை திருடுவதையும் தடுப்பதற்காகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கலிபோர்னியா தலைமை வழக்கறிஞர் சேவியர் பெசிரா தெரிவித்தார். #DonaldTrump #Emergency 
    ×